சீட்டிவேரம் கண்ணகை அம்மன்

ஆலயத்தின் சிறப்புப் பார்வை

வரணி எனும் பழமை பேணுகின்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் வீதிக்கு மேற்காக சோலைகள் சூழ்ந்த இடத்தில் அமைந்துள்ளது. வரணிப் பகுதி முழுவதற்கும் பொதுவான பெரிய சக்தி ஆலயமாக விளங்குகிறது. மூர்த்தி,தலம், தீர்த்தம் என்பவை ஒருங்கே அமையப்பெற்ற சிறப்பைப் பெறுகின்றது.

மூர்த்தி – சிட்டிவேரம் கண்ணகை அம்மன் என்பதாகும்.
தலம் – வரணி, சிட்டி வேரம்(சுட்டிபுரம்) என்பதாகும்.
தீர்த்தம் – தும்புருவில்
தலவிருட்சம் – பாலை என்பதாகும்.

இவ் ஆலயத்தின் தீர்த்தமானது மேற்காக எல்லாப் பக்கமும் வயலால் சூழப்பட்டு தும்புருவில் பிள்ளையார் கோயிலுக்கு அண்மையில் உள்ள திருக்குளமாகும். முன்பு ஒரு காலத்தில் தும்புரு என்ற முனிவர் இக்குளத்தில் நீராடி அம்பாளைப் பூசித்ததாகக் கூறப்படுகிறது. அவர்களிற்கு இப்போதும் திருவிழா நடைபெற்று பைரவர் சாந்தி நடைபெறும் போது ஏழு படையல்கள் பாரம்பரிய முறைப்படி செய்யப்படுகின்றன. இக்குளத்தில் வெண்டாமரை, செந்தாமரை,நீலோற்பலம், செங்கழுநீர் போன்றவைகளும் மேலும் பல மூலிகை அம்சங்களும் உள்ளன. இத் தீர்த்தத்திற்கு அருகாமையில் வடக்காக பிள்ளையார் கோயில் உள்ளது. இதன் தலவிருட்சம் அரசாகும். அத்துடன் மருத மரங்களும் சூழவுள்ன. இப் பிள்ளையார் மேற்கு நோக்கி அமைந்துள்ளார். ஆலய தர்மகர்த்தா இராமநாதன் குடும்பத்தினர் பல லட்சம் ரூபாய் செலவு செய்து கிழக்கு நோக்கி ஆலயம் அமைக்க அடித்தளமிட்டனர். ஆனால் பிள்ளையார் அதனை விரும்பாது தடுத்துவிட்டார். எனவே மீண்டும் மேற்கு நோக்கி புதிய ஆலயம் அமைக்கப்பட்டு கும்பாபிஷேகமும் செய்யப்பட்டுள்ளது. 

ஈழத்திலே கண்ணகை வழிபாட்டிற்கு தனித்துவமான இடம் உண்டு.இவ் வழிபாடு தாய் நாடாகிய தென்னிந்தியாவில் இருந்து இலங்கைக்கு வந்ததாக வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன. அந்த வகையில் கண்ணகி பாண்டி நாட்டிலே மன்னனிடம் நீதி கேட்டு சிலம்பை உடைத்து உண்மையை நிலைநாட்டி மதுரையை எரித்தார். நல்லவர் தப்பினர் தீயவர் தீயுள் மாய்ந்தனர். இவ்வேளையில் கண்ணகி கடும் சீற்றம் கொண்டிருந்தார். அது தணிவதற்காக கடல் கடந்து ஈழம் வந்ததாக கூறப்படுகிறது. அவ்வாறு வந்த கண்ணகித் தாய் பத்து இடங்களில் விசேடமாக தரித்திருந்ததாக கொள்ளப்படுகிறது. அவற்றிலே முதலாவதாக மாதகல் பாணாக வெட்டி என்ற இடத்திலும் இரண்டாவதாக கந்தரோடைக்கு அண்மையில் அங்கணமைக்கடவை என்ற இடத்திலும் அமர்ந்ததாகக் கருதப்படுகிறது. 

அக்காலத்தில் தென்மராட்சியில் விசேடமாக மட்டுவில் பன்றித்தலச்சி கண்ணகை அம்மன் ஆலயம் (3ம் இடம்), இலஞ்சியாரணம்பதி கண்ணகை கோவில் (சோலையம்மன் 4வது இடம்), வரணி சிட்டி வேரம் கண்ணகை (5வது இடம்), கச்சாய் கண்ணகை (6வது இடம்), மிருசுவில் கொட்டிகை கண்ணகை (7வது இடம்) என்றவாறு இருந்து பத்தாவதாக முல்லைத்தீவு நந்திக் கடற்கரையில் உறைந்ததாகவும் கூறப்படுகிறது. அதுவே தற்போது வற்றாப்பளை என அழைக்கப்படுகிறது. (பத்தாம்பளை என்பது மருவி இவ்வாறு கூறப்படுகிறது) இவ்வாறு இருந்த பின்பு தாயார் சேரநாடு சென்று கைலாயகிரியை அடைந்ததாக கொள்ளப்படுகிறது. கண்ணகை உறைந்த பத்து இடங்களிலும் பிரசித்தி பெற்ற ஆலயங்கள் எழுச்சி அடைந்துள்ளன. இவை பற்றிய விபரங்கள் பத்து செப்பேடுகளில் இருந்ததாகவும் அவை வேற்று மதத்தவரினால் அழிக்கப்பட்டதாகவும் ஆதாரங்கள் கூறுகின்றன. ஈழத்தில் கண்ணைத் தாய் உறைந்த பத்து இடங்களில் உற்று நோக்கினால் சோலைகளும், பொய்கைகளும், தாமரைக் குளங்களும், வயல் நிலங்களும் சூழ்ந்த எழில் கொஞ்சும் இடங்களாக விளங்குவதனை அவதானிக்க முடிகின்றது.அவை கண்ணகைத் தாயின் அகோரத்தை தணிப்பதாக அமைந்தன.தன்னைக் குளிர்ச்சிப்படுத்தியதால் இந்த இடங்களில் எவ்வகையான விளைச்சல்களும் நிறையக் கிடைத்தன.வளம் பெருகிய இடங்களாக விளங்கி வருவதைக் காண்கிறோம்.

இவ்வாறான இடங்களில் உறைந்த தாய் ஒரு கையில் தாமரை மலரும் மறுகரத்தில் நெற்கதிர்களையும் தாங்கியவாறு காட்சியளித்ததாகக் கூறப்படுகிறது. இக்காட்சி கண்ணைத் தாய் எமக்குத் தேவையான எல்லா வளங்களையும் யோகங்களையும் தருகின்றார் என்பதனை தத்துவார்த்தமாக குறித்து நிற்கின்றது என்பர். மேற்படி அம்சத்தினை சிட்டி வேரம் மூலமூர்த்தியில் காணலாம். தாய் உறைந்துள்ளது ஐந்தாவது இடமாகையால் திருவைந்தெழுத்து வடிவாகிய நாயகியாக கொள்ளப்படுகிறார். மூலமூர்த்தியை நோக்கும் போது வலது பாதத்தை மடித்து இடது பாதத்தினை தொங்கவிட்ட நிலையில் அமர்ந்த மூர்த்தியாக சுகாசன நிலையில் விளங்குகின்றார். வலது கரத்தில் தாமரை மலரும் இடது கரத்தில் வரத முத்திரையையும் கொண்டு விளங்குகின்றார். 

எனவே, போகமூர்த்தி அம்சத்தில் இருப்பதனை காணலாம். இவ் விக்கிரகம் சோழர் காலத்திற்குரியது. என்பது பேராசிரியர் செ.கிருஷ்ணராசா பேராசிரியர் ப.புஸ்பரட்ணம் ஆகியோரது கருத்தாகும். எனவே தான் திருவிழாவை மிகவும் பொருள்,நிதி செலவு செய்து பிரமாண்டமாகச் செய்யும் போது அதனை விடப் பன்மடங்கு செல்வத்தை அவர் வாரிவழங்குவதைக் காலம் காலமாகக் காண்கிறோம். இவ்வாறு கண்ணகைத் தாய் உறைந்து அருளாட்சி செய்த இடங்களிற்கு இன்னொரு வகையிலும் சிறப்பு ஏற்பட்டதனை அவதானிக்க முடிகின்றது. அதாவது தமிழ் நாட்டிலே சேரன் செங்குட்டுவன் கண்ணகை விழா எடுத்தான். அதற்காக எல்லாத் தேசத்தவரும் அழைக்கப்பட்டனர்.

Scroll to Top