ஆலய பரிபாலன சபை
ஞானியர் பரம்பரையினராலேயே இவ்வாலயம் நீண்டகாலமாக பரிபாலிக்கப்பட்டு வந்துள்ளது. பிற்காலத்தில் அவர்களின் விருப்பத்தின் பேரில் பரிபாலனம் கைமாறியுள்ளதையும் அறியமுடிகிறது. கி.பி 1812ம் ஆண்டளவில் விநாயகர் குமரர் என்பவர் தமது முன்னோர் மண்ணால் அமைந்த கோயிலை செங்கற்களால் புனருத்தானம் செய்து பரிபாலித்தார். கி.பி 1930களின் பின்பு கிட்ணர் – விநாயகர் என்பவரது தலைமையில் ஊர்ப் பொதுவாக கற்றளி வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன.
பொழிகல்லால் சிறப்பாக கோயில் அமைக்கப்பட்டு 1938 கருவறை, அர்த்த மண்டபம் மகா மண்டபம், நிருத்த மண்டபம் என்பன ஆகம முறைப்படி கற்றளியாக்கப்பட்டு பூர்த்தி செய்யப்பட்ன. இவை ஊர்ப்பொது உபயமாக எல்லா அடியவர்களின் நிதியையும் கொண்டு அமைக்கப்பட்டது. என்பதைக் கருவறையின் பின்சுவரில் உள்ள கல்வெட்டு உறுதிப்படுத்துகிறது. வெகுதானிய வருடம் வைகாசி மாதம் திங்கட்கிழமை கன்னி லக்ன சுபமுகூர்த்தத்தில் 1938.06.13 இல் முதலாவது கும்பாபிஷேகம் நடைபெற்றது. மூலஸ்தான பண்டிகை ஆரம்பத்தில் பத்மமாகவே அமைக்கப்பட்டிருந்தது.
விநாயகர் பரிபாலித்து வரும்போது அவரது தாயார் அல்வாயில் இருந்தமை அறியப்படுகிறது. விநாயகர் இறக்க அவருடைய மகன் கிருஷ்ணபிள்ளை சிறுவனாக இருந்ததால் ஆலய பரிபாலனம் வரணி இயற்றாலையைச் சேர்ந்த வேதாரணியர் சிதம்பரநாதர் (மணியப்பா) அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. (1946) அவர் மிகுதிக் கட்டட வேலைகளைச் செய்து கோவிலைப் பரிபாலித்து வந்தார். சிதம்பரநாதரின் பின்பு சட்டநாயகம் குலநாயகம் (குலம் விதானையார்) என்பவரிடம் பரிபாலனம் ஒப்படைக்கப்பட்டது. (கி.பி 1983) அவரே முகாமையாளராக இருந்து கோயிலைப் பரிபாலித்தார்.
கோயிலில் இருந்த சில பிரச்சனைகளை மதிநுட்பத்தால் தீர்த்து வைத்தார். இவருடைய காலத்தில் விநாயகர் சந்நிதி , வசந்த மண்டபம் , தம்ப மண்டபம் , தரிசன மண்டபம் , மடைப்பள்ளி , களஞ்சியம் என்பன அமைக்கப்பட்டன. மணியப்பா காலத்திலே திருவிழா உபயகாரர்கள் எல்லோரும் சேர்ந்து அம்பாளுக்கு புதிய சித்திரத்தேர் அமைக்கத் தீர்மானித்தனர். 1974இல் யாழ்ப்பாணம் திருநெல்வேலியைச் சேர்ந்த சிற்பக் கலாநிதி ஸ்தபதி செல்லையா கந்தசாமி குழுவினரால் தேர்த் திருப்பணி வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன. குலம் விதானையாரும் , ஆசிரியர் க.வேலுப்பிள்ளையும் தேர் அமைப்பதற்கு முன்னின்று செயற்பட்டனர்.
1980.05.26 இல் புதிய சித்திரத்தேர் வெள்ளோட்டம் இடம்பெற்றது. தொடர்ந்து தேர் நிறுத்துவதற்கு தேர் முட்டியும் அமைக்கப்பட்டது. குலம் விதானையார் இறக்கவே அவருடைய தங்கை திருமதி – அன்னலட்சுமிப்பிள்ளை – சண்முகநாதன் ஆலய திருப்பணிகளை முன்னெடுத்துச் செல்ல முடியாது என்பதாலும் ஆலயத்தின் வளர்ச்சி கருதியும் திருவிழா உபயகாரர்கள் எல்லோரையும் ஒன்று சேர்த்து 09.06.2001 இல் பொதுக்கூட்டம் ஒன்றை நடாத்தினார். அப்போது பரிபாலன சபை ஒன்று அம்பாளின் திருவருளுடன் ஆரம்பிக்கப்பட்டது.
பெயர் | பதவி |
---|---|
திருமதி அன்னலட்சுமிப்பிள்ளை சண்முகநாதன் | தலைவர் |
திரு வல்லிபுரம் சின்னத்தம்பி | செயலாளர் |
திரு முத்தையா விவேகானந்தம் | பொருளாளர் |
திரு இராசையா இரத்தினம் | உபதலைவர் |
திரு சுப்பிரமணியம் நடேசபிள்ளை | உப செயலாளர் |