சீட்டிவேரம் கண்ணகை அம்மன்

அம்பாளின் அற்புதங்கள்

இவ் ஆலயத்துடன் தொடர்புடைய பல அற்புதங்களும் ஐதீகங்களும் உள்ளன. முன்னொரு காலத்தில் ஞானியர் பரம்பரையில் வந்த கரம்பைக் குறிச்சியில் வசிக்கும் கந்தர் என்பவர் கண்ணகையை வழிபடுவதில் பக்தி சிரத்தையுடையவராவார். அவர் சின்னம்மன் ஆலயம் இருந்த இடத்தில் வழிபாடுகள் செய்து வந்தார். அவர் ஒருநாள் தற்போது ஆலயம் உள்ள எய்ப்பன்றிக் காட்டுச் சூழலில் பனம்பழம் எடுக்கச் சென்றிருந்தார். கடகம் நிறைய பனம்பழம் எடுத்து விட்டு தூக்க முடியாது நின்றார். 

அவ்வேளை இயற்கை நிறைந்த அந்தச் சுற்றாடலில் தலைநரை கோலமுடைய வெள்ளைச் சேலையுடுத்த மூதாட்டி ஒருவர் வந்து பனம்பழக் கடகத்தினைத் தூக்கி உதவினார். பின்பு திரும்பிப் பார்த்த போது அவரைக் காணவில்லை. கந்தர் அதிசயத்துடனும் பயத்துடனும் வீடு சென்று நடந்ததைக் கூறினார். அன்றிரவு கந்தரின் தாய்க்கு அம்பாள் கனவில் தோன்றி தன்னுடைய ஆதிகால இடம் சோலை சூழ்ந்த அப்பதியே என்றும் தன்னை அங்கே வைத்து வழிபடுமாறும் கூறினாராம். விடிந்ததும் கந்தர் இந்த விடயத்தினை ஊர் மக்களுக்கு கூறி எல்லோரும் ஒன்று சேர்ந்து தற்போது ஆலயமுள்ள இடத்தில் பிரமாண்டமான நாவல் மரத்தின் கீழ் அம்பாளை வைத்துப் பொங்கலிட்டு வழிபாடுகளை செய்தனர். பின்பு எல்லோரும் சேர்ந்து மண்ணால் ஒரு கோயில் அமைத்தனர். தலவிருட்சமாக பாலை மரம் விளங்குகிறது. 

அருட்கவி சீ.வினாசித்தம்பி புலவருக்கு அவ்விருட்சத்திலேயே தாயார் தனது அருட்காட்சியைக் காட்டி அருளினார். கந்தருடைய ஞானியர் பரம்பரையினர் தொடர்ந்து பூசைகளைச் செய்தனர். இவர்கள் இந்தியாவினுடைய தமிழகத்துடன் தொடர்புடையவர்களாகும். அவர்கள் 1941ம் ஆண்டு வரை பரம்பரையாக இவ் ஆலயத்தினை பரிபாலித்து வந்தமை அறியப்படுகிறது. இன்னொரு அற்புதக் கதையும் உண்டு. ஒருவர் இந்த ஆலயச் சூழலிலே வழிபாடு செய்து விட்டு தனியாக அமர்ந்திருந்த போது வயது முதிர்ந்த மூதாட்டி ஒருவர் தனது தலையில் அதிகமான பேன் இருப்பதாகவும் அவற்றை எடுத்துத் தருமாறும் கூறினாராம். அங்கே நின்றவர் தலையைப் பார்த்த போது பேன் தெரியவில்லை. ஆயிரக்கணக்கான கண்கள் தலைக்குள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து பேனைக் காணவில்லை தலையெல்லாம் கண்ணாய் இருக்கிறதே என்று கூறினாராம். அம்மூதாட்டி சிரித்துக்கொண்டே திடீரென மறைந்து விட்டார். இது கண்ணகையின் திருவிளையாடல் ஆகும். இந்த ஆலயத்திலே பொய்ச் சத்தியம் செய்த சிலர் கண்பார்வை இழந்து குருடர்களாகத் திரிவதை பலரும் அறிவர். மேலும் போராளிகள் இராணுவத்தினர் பலரும் அம்பாளுடன் முரண்பட்டுத் தண்டனைகளை அனுபவித்துள்ளனர். 

அம்பாள் ஆலயத்தில் சண்டையிட்டவர்கள் பலவிதமாக தாக்கங்களை பெற்றதுடன் அழிவடைந்துமுள்ளனர். முக்கியமாக ஒழுக்கத்தை காக்கும் தேவியாக அம்பாள் விளங்கி வந்திருப்பதை அறியமுடிகிறது. பிழைவிடுபவர்களை தண்டித்து நல்வழிப்படுத்தி வைத்துள்ளனர்.

Scroll to Top