சீட்டிவேரம் கண்ணகை அம்மன்

அறநெறிப் பாடசாலை

வரணிப் பகுதியில் பிள்ளைகளின் அறநெறிக் கல்வியை வளர்த்து உயர்ந்த சைவத்தமிழ் ஒழுக்கத்தையும் பண்பாடுகளையும் பேண வழி செய்ய வேண்டுமென்ற உயர்ந்த நோக்கத்துடன் அம்பாளின் திருவருள் உத்தரவுடன் 21/01/2000ம் ஆண்டு தைப்பூச நன்னாளில் சைவப் புலவர் சி.கா.கமலநாதன் அவர்களால் வரணி சிட்டி வேரம் கண்ணகை அம்மன் ஆலய அறநெறிப் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது. இதற்கு அதிபராக அவரே விளங்கி வருகின்றார். காப்பாளராக சிவசிறீ.க.இராமசாமிக்குருக்கள் இருந்து வருகின்றார். 

இப்பாடசாலை இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தில் 12.03.2007 இல் பதியப்பட்டது. பதிவு இலக்கம் HA/7/56/14/155 என்பதாகும். இதன் மகுட வாசகம் அறமே வெல்லும் என்பதாகும். திணைக்களமும் அரச பரீட்சைத் திணைக்களமும் நடாத்தும் பரீட்சைகளில் மாணவர்கள் தோற்றி சிறந்த பெறுபேறுகளை பெற்றுவருகின்றனர். பண்ணிசை , கூட்டுப் பிரார்த்தனைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். அரசினதும் பரிபால சபையினதும் உதவியுடன் அறநெறிப் பாடசாலைக்கென ஆலயத்தின் தென்கிழக்கு மூலையில் 20111இல் நாள் அடிக்கல்லானது காப்பாளராலும் அதிபர் மற்றும் சபை உறுப்பினரகளாலும் நாட்டப்பட்டு புதிய கட்டடம் அமைக்கப்பட்டது. 

 இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் வழங்கிய நிதி 75000/= ஆக இருந்தது. ஆனால் மிகுதிப் பெருநிதியை ஆலய பரிபாலன சபை செலவு செய்து இக்கட்டடத்தை அமைத்தது. 2013 தைப்பூச நாளில் படம் வைத்து பால் காய்ச்சி புதிய கட்டடம் அதிபர் மற்றும் குருக்கள் பரிபாலன சபையினர் இணைந்து திறந்து வைத்தனர். தொடர்ந்து வகுப்புகள் பஜனைகள் நடைபெற்று வருகின்றன. உப அதிபராக 2013இலிருந்து திரு.கா.ராஜ்மோகன் அவர்கள் செயற்படுகிறார். 14.08.2013இல் ஆடிச் சுவாதியன்று இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் சுந்தரமூர்த்தி சுவாமிகளின் குருபூஜை செய்யப்பட்டது. மேலும் பிள்ளைகளிடையே பல்வேறு சமயம் சம்பந்தமான போட்டிகளை நடாத்தி பரிசளிப்பு விழா ஒன்றை விரிவாகச் செய்வதற்கு பரிபாலன சபையினரும் இணங்கியுள்ளனர்.

Scroll to Top