சீட்டிவேரம் கண்ணகை அம்மன்

தல வரலாறு

சிவபூமி என அழைக்கப்படும் ஈழவழ நாட்டில் சைவமும் தமிழும் மேலோங்கி விளங்கும் தென்மராட்சிப் பகுதியிலே அமைந்துள்ள வரணி எனும் ஊரில் மூர்த்தி,தலம், தீர்த்தம் எனும் முச்சிறப்புக்களுடனும் மிகவும் புராதனம் மிக்க தலமாகவும் வரணி சிட்டிவேரம் கண்ணகை அம்மன் ஆலயம் விளங்குகிறது. பனைமரம் தோன்றிய காலத்திலேயே தோன்றியதாகவும் சித்தர்கள் வேதித்த இடமாதலால் சிட்டிவேரம் என்ற பெயர் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இப்பெயர் பிற்காலத்தில் மருவி சுட்டிபுரம் என அழைக்கப்படுகிறது. பசுக்கள் நிறைந்து நின்று பால் பொழிவதால் இப்பெயர் பெற்றது போலவும் இது அம்பாளின் திருவருளோ என்று எண்ணத் தோன்றுகின்றது. ஏனெனில் புரம் என்ற முடிவைக் கொண்டமையும் இடங்களெல்லாம் பிரசித்தி பெற்ற இடங்களாக விளங்குவதனை அவதானிக்கலாம். 

உதாரணமாக இந்தியாவிலே காஞ்சிபுரம், சமயபுரம், திருவனந்தபுரம், தோணிபுரம்(சீர்காழி) என்றவாறு இருப்பதனையும் ஈழத்திலே சந்திரபுரம்(மட்டுவில்) துர்க்காபுரம்(தெல்லிப்பழை) என்றவாறு விளங்குவதனையும் சான்றாகக் கூறலாம். பழைய தோம்புகளை ஆராய்ந்த போது ஆலயம் அமைந்துள்ள பிரதேசம் “எய்ப்பன்றிக்காடு” என்று இருப்பதையும் காணமுடிகிறது. இன்று சுட்டிபுரம் என்ற பெயரே பிரசித்தி பெற்றுள்ளது.


தமிழ் அகராதியின்படி சிட்டி+வேரம் எனப் பிரித்து நோக்கும் போது சிட்டியென்பது ஒழுங்கு, கட்டளை, தூதுகாவற்றுச்செம்பு, படைப்பு என்ற பொருளைத் தருகிறது. வேரம் என்பது சரீரம், சலஞ்சாதித்தல்,சோம்பு, மஞ்சள், முகில் என்பனவள்றைக் குறிக்கிறது. இவற்றைக் கொண்டு ஆலய மூலஸ்தானத்திலே இருக்கும் நிலையில் கண்ணகை அம்மனின் செப்பால் செய்யப்பட்ட விக்கிரகம் ஆதியிலிருந்து காணப்படுகின்றமையால் தூதுகாவற்றுச் செப்புச் சரீரம் கொண்ட கண்ணகை உறையும் இடம் என்ற அடிப்படையின் பெயரில் இப்பெயர் இடம்பெற்றிருக்கலாம் எனக் கருதமுடியும். தற்போது இருக்கும் ஆலயத்திற்கு ஈசான மூலையண்டியதாக (வடகிழக்கே) வரணி மத்திய கல்லூரக்கு கிழக்காக சின்னம்மன் ஆலயம் என அழைக்கப்படும் ஓரிடம் உண்டு. அந்த இடத்தில் செய்யப்பட்ட தொல்லியல் ஆய்வுகளின் போது ஒரு அடி அகலமும் ஒன்றரை அடி நீளமும் கொண்ட ஏராளமான செங்கற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிட்டுக் கூறக்கூடியதாகும். இந்தச் சின்னம்மன் ஆலயச் சூழலிலே தான் சுட்டிபுரம் அம்பாளை பரம்பரையாக பூசித்து வந்த முன்னைய ஞானிய பரம்பரையினர் இருந்ததையும் அறிய முடிகிறது. 

முன்பு மூலஸ்தானத்தில் இருந்த அம்பாள் விக்கிரகம் (ஐம்பொன்) ஞானியர் பரம்பரையினால் சின்னம்மன் ஆலயப் பகுதியில் வைத்துப் பூசிக்கப்பட்டு வந்ததாகவும் ஒவ்வொரு திங்கட்கிழமகளிலும் வில்லு வண்டியில் கொண்டு வந்து தற்போது கோயில் இருக்கும் சோலைக்குள் வைத்து வழிபாடுகள் செய்து விட்டு பின்பு சின்னம்மன் ஆலயத்திற்கு கொண்டு சென்று பாதுகாப்பாக வைத்திருந்ததாகவும் அம்மரபினர் கூறுகின்றனர். காலஞ்செல்ல தற்போது கோவில் உள்ள சோலைப்பகுதியிலேயே செங்கல்,சுதை , சுண்ணாம்பு என்பவற்றை கொண்டு ஒரு கோயிலை அமைத்து நிரந்தரமாக அம்பாளின் விக்கிரகத்தை அங்கே வைத்து வழிபாடுகள் செய்து வரப்பட்டதாக கூறுகின்றனர். அந்த பழைய செங்கல் கட்டடத்தின் எச்சங்கள் தற்போதும் உள்ளதைக் காணலாம்.

Scroll to Top