சீட்டிவேரம் கண்ணகை அம்மன்

பொங்கல் வழிபாட்டு முறைகள்

சிட்டி வேரம் கண்ணகை அம்பாள் ஆலயத்தில் அலங்கார உற்சவமே நடைபெற்று வருகிறது. இது வைகாசி மாத விசாகப் பொங்கலுடன் ஆரம்பமாகிறது. வற்றாப்பளை அம்மன் ஆலயத்தில் பொங்கல் நடைபெறும் அதேவேளை இங்கும் பொங்கல் நடைபெறுகிறது. இந்தப் பொங்கலானது ஆகம முறை சாராத வகையில் பாரம்பரிய சடங்குகளுடன் பின்னிப் பிணைந்து பக்தி சிரத்தையுடன் செய்யப்படுகிறது. பொங்கலுக்கு முன்பாக 15 நாட்களுக்கு முன் ஊர் பொது அபிஷேகம் ஒன்று செய்யப்படும். இந்த ஊர் அபிஷேகம் நடைபெறுவதற்கு முதலில் இவ் ஆலயத்துடன் தொடர்புடைய வீரபத்திரர் கோயிலுக்கு மடை போடப்பட்டு வழிவெட்டி பரிகலங்கள் விடப்படும். அங்கிருந்து தேவதைகள் அம்பாளின் ஆலயத்திற்கு வருவதாக நம்பப்படுகிறது. 

இந்த ஊர் அபிஷேகம் நடைபெறும் போது அன்னதானம் நடைபெறுவதில்லை. முன்னோர்களின் கருத்துப்படி திருவிழாவிற்கு முன்பாக தேவதைகளை அகற்றுவதற்கு வசதியாகவே ஊர் அபிஷேகமும் செய்யப்படுகிறது என்பர். பொங்கலுக்கு முன்பாக பண்டமெடுக்கும் நிகழ்வு இடம்பெறும். அம்பாள் ஆலயத்திற்கு தெற்காக எருவன் பகுதியில் அமைந்துள்ள கொட்டிகை முருகன் ஆலயத்தில் இருந்தே பண்டம் எடுத்தல் நடைபெறும். மேற்படி முருகன் ஆலயத்தின் வாசலில் நிற்கின்ற வேப்பமரத்தின் கீழே வைத்துப் பண்டம் எடுக்கப்படும். முன்னைய காலங்களிலே ஏழிற்கு மேற்பட்ட வண்டில்களில் சந்தையில் இருந்து பண்டப் பொருட்கள் அங்கே கொண்டுவரப்படும். மூன்று மண்ணாலான வளந்துகளும் வைக்கப்படும். கலையாடுபவர்களாக சிலருடைய விபரம் கிடைத்துள்ளது. கிட்னர், விநாயகர், சின்னக்குட்டி (மணியப்பா) , பொன்னப்பா , பூசாரி வி.சின்னத்தம்பி போன்றோர் முன்னைய காலங்களிலே முறையாக செய்து வந்துள்ளனர். 

தற்போது கந்தையா , சிதம்பரம் பிள்ளை இத்தெய்வீக பணியை செய்து வருகின்றனர். இவர்களுக்கென விசேடமாக ஆடையும் சலங்கையும் உண்டு. அவற்றை கட்டி பறை முழங்கப் பிள்ளையாருக்கும் முருகனுக்கும் தேங்காய் உடைத்து கற்பூரமேற்றி சலவைத் தொழிலாளியிடம் தூய வெள்ளைச்சேலை வாங்கி தூபம் காட்டி தெய்வங்களை வேண்டி நேர்ந்து கொள்வர். வேம்பின் இரு கரைகளிலும் வெள்ளை சேலை விரிக்கப்பட்டு வண்டியில் இருக்கும் பொருட்கள் இறக்கி வைக்கப்படும். இதன் பின்னர் நான்கு சூலங்கள் நேரப்படும். முதலாவது அம்பாளுக்குரியது (ஐமுகச்சூலம்) ஏனையவை முறையே வீரபத்திரர், வைரவர், முனீஸ்வரர் என்றவாறு அமையும். இதன் பின்னர் பறை முழங்கப் பூசை இடம்பெறும். கலையாடுபவர் உருக்கொண்டு சூழ இருக்கும் தெய்வங்களுக்கு பல தேசிக்காய்கள் பச்சரிசி எறிந்து திருப்திப்படுத்துவர். வேப்பம் பத்திரத்தினால் எல்லா வண்டில்களுக்கும் தண்ணீர் தெளித்து தூபம் காட்டி புனிதப்படுத்துவர். இதன் பின்னர் பறை அடிப்பவர் மேல் காடேறியை ஏற்றி உருக்கொள்ளச் செய்து காடேறி விழுத்துதல் நடைபெறும். அதனைத் தொடர்ந்து பூசை முடிய பண்டம் எடுக்கப்பட்டு கோவிலடியை நோக்கிப் புறப்படும். பண்டம் வரும் வீதியோரங்களில் நிறைகுடங்கள் வைத்து அடியவர்கள் அம்பாளை வரவேற்பார்கள். அம்பாள் திருநடனம் புரிந்து அருள் வழங்குவார். 

நிறைகுட நீர் சூலத்திற்கு அபிஷேகம் செய்யப்படும். தும்புருவில் பிள்ளையார் கோவிலை அடைந்ததும் தேங்காய் உடைத்து மூன்று தேசிக்காய்கள் வைத்து கற்பூரம் ஏற்றி வழிபாடுகள் நடைபெறும். விநாயகரின் அனுமதி பெற்று பண்டம் ஆலயம் நோக்கி செல்லும். ஆலய முகப்பில் வண்டில்கள் அம்பாளை பார்த்தபடி நிற்க பண்டம் இறக்கப்பட்டு உள்வீதி வலம் வந்து ஆலய மண்டபத்தில் வைப்பர். இந் நிகழ்வு திங்கட்கிழமை இரவு நடைபெறும். செவ்வாய் காலையில் அபிஷேகம் நடைபெற்று வாசலில் சூலங்கள் நேர்ந்து நாட்டப்படும். தெய்வங்களின் ஆயுதங்களான பிரம்பு,சிலம்பு, வாள்,கத்தி,தண்டம் என்பனவும் வேப்பம்பத்திரி சலங்கையும் வைக்கப்படும். பூசை நடைபெற்று மூன்று வளர்ந்து நேரப்படும். (கணபதி, கண்ணகை,வைரவர்) வாசலில் வைத்து பொங்கல் இடம்பெறும். நிருத்த மண்டபத்தின் இருபுறமும் மடை போடப்பட்டு ஏழு துலக்கங்கள் முக்கியமாக வைக்கப்படும். இதனை விட பரிகலங்களிற்குரிய மடைகளும் தனித்தனியே இடம்பெறும். இதனை படைக்கப்பட்ட பின்பு மூலஸ்தான பூசை நடைபெறும். சூலங்களிற்கு பூசை நடைபெறும். 

அத்துடன் காடேறி விழுத்துதல் நடைபெறும். மேலும் தீக்குளித்தலும் நடைபெறும். பின்பு ஆலயத்தின் கிழக்காக சென்று வழிவெட்டும் இடத்தில் குலங்களை நாட்டி மேலும் கீழுமாக இரு வெள்ளைச் சேலைகள் பிடிக்க ஏழு உருண்டைகள், பழவகைகள் வைக்கப்படும். பின்பு பூசை நடைபெறும். ஏழு இளநீர்கள் வைத்து வழி வெட்டப்படும். தேசிக்காய், பச்சரிசி எறிந்து பரிகலங்கள் திருப்திப்படுத்தப்படும். இதன் பின்னர் கோயில் குருக்கள் மடை கலைத்து சண்டேஸ்வர பூசையுடன் விபூதிப் பிரசாதம் வழங்கப்படும்.

Scroll to Top