வழிபாடுகள்
சிட்டி வேரம் கண்ணகை அம்பாள் ஆலயத்தில் ஆரம்ப காலங்களில் ஞானியர் பரம்பரையைச் சேர்ந்தவர்கள் ஆகமமுறை சாதாரண முறையில் பக்தி மார்க்கமாக பூசைகள் வழிபாடுகளை செய்து வந்தனர். திங்கட்கிழமைகளிலே அம்பாளுக்கு விசேட வழிபாடுகள் இடம்பெற்று வந்தன. பொங்கலைத் தொடர்ந்து 15ம் நாள் வைகாசி வந்த முதல் திங்கட்கிழமை ஊர் மக்கள் எல்லோரும் பொங்கலிடத் திருவிழா ஆரம்பமாகும். இதற்கு முன்பு வரும் சனிக்கிழமை பொது அன்னதானம் ஒன்று இடம்பெறும். 14 நாட்கள் திருவிழா நடைபெறுகிறது. 8ம் திருவிழா வேட்டையாகவும் 12 சப்பறமாகவும் 13 தேராகவும் 14 தீர்த்தமாகவும் விளங்குகிறது.
தீர்த்தத் திருவிழா அன்று அம்பாள் தும்புருவில் குளத்திற்கு எழுந்தருளி தீர்த்தமாடிய பின்பு பிள்ளையாரை நோக்கி எழுந்தருளி இளைப்பாறுவார். இதனைத் தொடர்ந்து இடம்பெறும் வெள்ளிக்கிழமை வைரவர் மடை நடைபெறும். அன்றைய தினம் முன்னைய காலங்களிலே அம்பாளைப் பூசித்து வந்த சித்தர்களுக்கும் முனிவர்களுக்கும் ஏழு படையல்கள் செய்யப்படுவது சிறப்பிற்குரிய அம்சமாகும். பங்குனித் திங்கள் உற்சவமும் காலம் காலமாக விசேடமாக கொண்டாடப்படுகிறது. அம்பாளுக்கு விசேட அபிஷேகம், குளிர்த்தி போடுதல் அம்பாள் வீதி வலம் வருதல் என்பன இடம்பெறுகின்றன. அம்பாளின் சோலை முழுவதும் பெரும் திரளான பக்தர்கள் நீர்க்கஞ்சி உண்டு மகிழ்வர்.
ஒவ்வொரு நாளும் மூன்று பூசைகள் நடைபெறுகின்றன. நவராத்திரி விழா கும்பம் வைத்து சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. தொடர்ந்து கேதாரகௌரி விரதம் 21 நாட்களும் சிறப்பாக நடைபெறுகிறது. பெருமளவு அடியவர்கள் கொரிகாப்பு வாங்கி அணிவர். மேலும் கந்தசஷ்டி, பிள்ளையார் கதை , அபிராமிப்பட்டர் விழா , ஆடிப்பூரம் , வரலட்சுமி விரதம் என்பனவும் முறையாக இடம்பெறுகின்றன. இவ் ஆலயத்தில் புராதன காலம் தொடக்கம் கோவலன் கண்ணகி கதை படிக்கப்பட்டு வந்தமை ஆதாரபூர்வமாக அறியப்படுகிறது. இதற்கென ஆலயத்தில் புராதன ஏடு பராமரிக்கப்பட்டு பூசிக்கப்பட்டது. அதனுடைய காப்புச் செய்யுளைக் கொண்டு பார்க்கும்போது வடமராட்சி கிழக்கு குடாரப்புவை சேர்ந்த கந்தர் – வெற்றி வலுகவிராயர் என்பவர் அதனை இயற்றியமை ஆதாரபூர்வமாக அறியப்படுகிறது. அந்தப் பழைய ஏடு பின்பு 15.07.1955 இல் புதிய ஏடாக எழுதி பாதுகாக்கப்பட்டது . தற்போது இந்த ஏடு மிகவும் பழுதான நிலையில் உள்ளது. இந்த ஏடு தரும் தகவலின் படி இவ்வாலயத்தைச்சூழ ஏழு ஆலயங்கள் காவலாக அம்பாளுடன் இணைந்து அருளாட்சி செய்வதாக அறியப்படுகிறது. அவையாவன,
- வரணி இயற்றாலை வீரபத்திரர் கோயில்
- குடமியன் சடை வைரவர் கோயில்
- நாவற்காடு மதளை வைரவர் கோயில்
- எருவன் பிள்ளையார் கோயில்
- குடமியன் விறுமர் கோயில்
- வரணி வடக்கு மாசேரி புராதன குருநாதர் கோயில்
என்பவை அவையாகும். இவ்வாலயங்களும் பரம்பரை மரபுகளை பேணிவருகின்றன. இவற்றிலே குடமியன் சடைபைரவரில் அம்பாளின் தேர்த்திருவிழா அன்றே பொங்கல் நடைபெறுவதும் பலியிடப்படுவதும் வழமையாக உள்ளது. புராதன குருநாதர் கோயிலிலும் பழைய மரபுகள் முறையாகப் பேணப்படுகின்றன. இவ்வாறான பரிவார கோவில்கள் புடைசூழ அம்பாள் அருளாட்சி செய்வது மிகவும் சிறப்பிற்குரியதாகும். அம்பாளுக்கு பொங்கல் ஆரம்பித்து பின்னர் எல்லா ஆலயங்களிலும் நடைபெற்று பூர்த்தியாக ஆனிமாதக் கடைசி வெள்ளிக்கிழமை குருநாதர் கோயில் பொங்கலுடன் பொங்கல் வழிபாடுகள் நிறைவு பெற்று ஞாயிற்றுக்கிழமை ஐயன் கோயிற் பொங்கலுடன் பரிகலங்கள் மற்றும் தேவதைகள் கதிர்காமத்திற்குச் சென்று தீர்த்தமாடுவதாக புராதன காலம் தொடக்கம் மரபாக இருந்து வருகிறது. திருவிழாக் காலங்களில் கோவலன் கண்ணகி கதை படிக்கப்பட்டு தீர்த்தத்தன்று முடிவுறுவதையும் அறியமுடிகிறது. அம்பாளின் அடியவர்கள் பல்வேறு நேர்த்திகளை வைத்து அவற்றை நிறைவேற்றி தாயின் அருளைப் பெறுவர். கண்மடல் கொடுத்தல் , காவடி எடுத்தல் , தீக்குளித்தல் , அடியளித்தல் , அன்னதானம் வழங்குதல் , ஸ்நபன சங்காபிஷேகம் செய்தல் என்பன நடைபெறுகின்றன. புதிய கும்பாபிஷேகத்தினை தொடர்ந்து அம்பாளுக்கு அதிகமான அபிஷேகங்கள் இடம்பெறுவது அம்பாளின் திருவருளே ஆகும்.
தேர்த்திருவிழா அன்று அம்பாள் பச்சை சாத்திப் பன்னீர் மழை சொரிய ஆனந்தக் கூத்தாடி வரும் காட்சி மிகவும் அற்புதமானதாகும். அதனைத் தொடர்ந்து இடம்பெறும் பிராய்ச்சித்த அபிஷேகம் மகிமை உடையதாகும். குடம் குடமாக பால் அபிஷேகம் செய்யப்படுவதும் பால் ஆறாக ஓடுவதும் அற்புத காட்சியாகும். அப்போது டாக்டர் சீர்காழி கோவிந்தராஜன் பாடிய “பட்டிப் பசுவினங்களெல்லாம் பாலபிஷேகம் செய்யும் கண்ணகையே “ என்ற அடிகள் தான் நினைவில் வரும்.
அம்பாளின் ஆலயத்திலே ஆரம்ப காலங்களில் சித்தர்கள் பூசித்தனர். பின்பு பூசாரிமார் பூசைகளைச் செய்தனர். 1942 தொடக்கம் வரணி குருக்கள் குடியிருப்பைச் சேர்ந்த சைவக்குருமார்கள் நித்திய நைமித்தியங்களை செய்து வந்தனர். சிவசிறீ பொன்னையா குருக்கள் நீண்ட காலமாக நித்திய பூசை , திருவிழாக்கள் என்பவற்றை செய்து வந்துள்ளார். அவரைத் தொடர்ந்து தற்போது இருக்கும் சிவசிறீ இ.குமாரசுவாமிக்குருக்கள் பிரதம குருவாக இருந்து நித்திய , நைமித்தியங்களை ஆகம முறைப்படி பக்தி பூர்வமாக செய்து வருகின்றார். இவரது பூசைச் சிறப்புக்களால் ஆலயம் படிப்படியாக பெருவளர்ச்சி கண்டுள்ளது. இவர் இவ் ஆலயத்திலே பூசகராக இருந்து குருப்பட்டம் இங்கேயே பெற்றுக் கொண்டவர் என்பது சிறப்பிற்குரியது. மேலும் அவருக்கு உதவியாக இருக்கும் சிவசிறீ க.ஐங்கரன் ஐயாவும் ஏனைய அர்ச்சகர்களும் இவ்வாலய வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கின்றனர்.